விளாப்பாக்கம்
திருப்பாண்மலை இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் சின்னமாகும். இது ஆற்காட்டிலிருந்து தென்மேற்கே 6-கி.மீ தூரத்தில் விளாப்பாக்கம் என்ற கிராமத்தின் எல்லைப்பகுதியில் ஆற்காடு – கண்ணமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
இங்கு பல்லவர் கால குடைவரை ஒன்று குன்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஆறு முழு தூண்களையும், இரு அரை தூண்களையும் கொண்டு குடைவரை குடையப்பட்டுள்ளது. இக்குடைவரையின் மேல்பகுதியில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று குடையப்பட்டுள்ளது. இக்குன்றின் மேல் சமண படுக்கைகள் சிலவும் அக்கால செங்கல் கட்டிட பகுதிகள் சிலவும் சிதைந்த நிலையில் உள்ளது. அழகிய அம்பிகை யக்ஷியின் உருவம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சிற்பம் பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் வெட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டு கூறுகின்றது. இங்கிருந்த சமண முனிவர்களுக்கு இதன் அருகிலேயே கூராம்பாடி என்ற ஊரை இறையிலியாக கொடையாக அளித்ததை இங்குள்ள மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. மேல்குன்றிலும் இக்கல்வெட்டின் அருகிலும் தீர்த்தங்கரர் சிற்பங்கள் அழகுற புடைப்புச்சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.