மூடு

கலை மற்றும் பண்பாடு

வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்

தியாகராஜரின் சீடர்களில் முக்கியமானவரான வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர் (1781-1874) தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் உதித்தவர். பின் கரவெட்டி நகர அரசருக்கு இசை கற்றுக்கொடுக்கும் பொருட்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் வாழ்ந்தார். தியாகராஜ பாகவதரின் கீர்த்தனைகளை தொகுத்து உலகுக்களித்து கர்நாடக இசைக்கு பெரும் தொண்டாற்றியவர். குருவான தியாகராஜ பாகவதரை போற்றி ஸ்ரீகுரு ஸ்தோத்திராஷ்டகம், ஸ்ரீகுரு மங்களாஷ்டகம் ஆகியவற்றை இயற்றியுள்ளார். வேங்கடரமண பாகவதர், அவரின் மகன் கிருஷ்ணஸ்வாமி பாகவதர் மற்றும் அவரின் சிஷ்யர்களின் வழியே தியாகராஜரின் கீர்த்தனைகள் வெகுவாக மக்களை அடைந்தன. இதன் மூலம் வாலாஜாபேட்டை பாரம்பரியம் கர்நாடக இசையில் உருவாகிற்று.

இவரின் புகழ் பாடும் விதமாக அய்யம்பேட்டையில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் சங்கீத விழா கொண்டாடப்படுகிறது.

இசை உலகிற்கு இவர் ஆற்றிய பெரும் தொண்டினை கௌரவிக்கும் விதமாக தபால் துறை 2009ம் ஆண்டில் தபால் தலை மற்றும் முதல் நாள் தபால் உறையும் வெளியிட்டுள்ளது.

நாட்டுப்புறக் கலைகள்

தெருக்கூத்து

தமிழகத்திலுள்ள மரபுக் கலைகளுள் தெருக்கூத்து குறிப்பிடத்தகுந்த ஒன்று. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் ஒருங்கே இணைந்தது இக்கலை. தமிழகத்தில் வேலுhர், திருவண்ணாமலை, தென்ஆற்காடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இக்கலை சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது. தெருக்கூத்தினைத் தெற்கத்திப் பாணி, வடக்கத்திப் பாணி என்று இருவகையாகப் பகுப்பர். தென் ஆற்காடு மாவட்டமும், புதுச்சேரி மாநிலமும் தெற்கத்திப் பாணியிலடங்கும். திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டக் கூத்துகள் வடக்கத்திப் பாணியாகும். வடக்கத்திப் பாணியில் முகவீணை என்ற இசைக்கருவி பயன்படுத்தப்படும். வடக்கத்திப் பாணிக் கூத்தர்கள் விறைப்பான பாவாடைகளை அணிவர். கிராமப் பகுதிகளில் பங்குனி மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை தெருக்கூத்து நடத்தப்படுகிறது.

ஒரு தெருக்கூத்துக் குழுவில் பதினைந்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருப்பர். தெருக்கூத்துக் குழுவினை “சமா” என்று அழைப்பர். குழுவினரைத் திரட்டிப் பயிற்சியளித்துத் தலைமை தாங்குபவர் “வாத்தியார்”. பெரும்பாலும் கோயில் சார்ந்த சடங்குகளுள் ஒன்றாகவே தெருகூத்து கருதப்படுகிறது. தெருக்கூத்தில் கட்டை கட்டி ஆடுவது அக்கலையின் சிறப்புகளுள் ஒன்று. எனவே இதனைக் ‘கட்டைக்கூத்து’ என்றும் சிலர் அழைக்கின்றனர். கட்டை கட்டிக்கொண்டு ஆடுபவர்கள் தமது தோள்களில் பெரிய புஜக்கட்டைகள், பெரிய கிரீடம் அல்லது குச்சிமுடி, மரத்தால் செய்யப்பட்ட மார்புப் பட்டை, கன்னக் கதுப்பு ஆகியவற்றை அணிந்திருப்பர். தமது இடுப்பைப் பெரிதாகக் காட்டச் சேலைகளைச் சுற்றிக் கட்டியிருப்பர். தெருக்கூத்தில் இசை முக்கியமான கூறாகும். டோலக் அல்லது மிருதங்கம், தாளம் எனப்படும் சால்ரா, சுருதிபெட்டி எனப்படும் ஆர்மோனியம் ஆகியவை தெருக்கூத்திற்குரிய இசைக்கருவிகளாகும். பல குழுக்களில் முகவீணை அல்லது புல்லாங்குழல் இசைக்கப்படுகிறது. மேடையில் தோன்றும் கலைஞர் பாடும் பாட்டுக்கு இசைக் கருவிகளை இசைப்பவர்கள் உரத்துப் பின்பாட்டுப் பாடுவர்.

பாரத விழா அல்லது திரௌபதி அம்மன் கோவில் விழாக்களில் தீ மிதி உற்சவத்தின் போது தெருக்கூத்து முக்கியமாக இடம் பெறுகிறது. மழை வேண்டி விராட பருவக் கூத்தையும், இறந்தவர்கள் மோட்சம் பெறுவதற்குக் கர்ணமோட்சம் கதையையும் நடத்துகின்றனர். மாசி மாதத்தில் மன்மதன் எரிப்பு நிகழ்ச்சியில் தெருக்கூத்து ஆடுவதுண்டு. மகாபாரதத்தில் கீழ்வரும் பல சம்பவங்கள் கூத்துகளுக்கு அடிப்படைக் கதைகளாக அமையும்.

  1. திரௌபதி கல்யாணம்
  2. சுபத்ரா கல்யாணம்
  3. ராஜசூயயாகம்
  4. திரௌபதி துகில் உதித்தல்
  5. அர்ஜீனன் தபசு
  6. குறவஞ்சி
  7. கீசகவதம்
  8. கிருஷ்ணன் துhது
  9. அபிமின்யு சண்டை
  10. கர்ண மோட்சம்
  11. பதினெட்டாம் போர்

வட மாவட்டங்களில் வாழும் மக்களுக்குத் தெருக்கூத்து என்பது வாழ்வோடு கலந்த கலை. புராண, இதிகாசக் கதைகளைத் தெருக்கூத்தின் வழியாக அம்மக்கள் நன்கு அறிந்துள்ளனர். கூத்தில் ஏதேனும் பிழை இருந்தால் கூட அவர்கள் அதனைக் கண்டுபிடித்துவிடுவர். பல தொண்டு நிறுவனங்களும், அரசு சார்ந்த நிறுவனங்களும் தெருக்கூத்தைப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துகின்றன.

கைச்சிலம்பாட்டம்

காலில் அணியும், ஒலிக்கும் சிலம்புகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு ஆடும் கலை கைச்சிலம்பாட்டம் எனப்படும். சிலம்பு என்ற இசைக்கருவியைக் கைகளில் வைத்திருபபதால் இது கைச்சிலம்பாட்டம் என்ற பெயர் பெற்றது. இது பம்பைச் சிலம்பாட்டம், என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள போர்க்கலையான சிலம்பாட்டத்திலிருந்து வேறுபடுத்துவதற்காக இதனைக் கைச்சிலம்பாட்டம் என அழைத்தனர் என்றும் கூறப்படுகிறது. கைச்சிலம்பாட்டம் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர் , தர்மபுரி, தென் ஆற்காடு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது. இது கோவில் சார்ந்த கலை. கோவிலின் வழிபாட்டுக் கூறுகளுள் ஒன்றாக, கோவில் தெய்வத்தின் புகழ்பாடும் கலை என்ற அளவில் இது மதிக்கப்படுகிறது. இது அம்மன் கோவிலில் நிகழ வேண்டிய கலையாக இருப்பினும் வேறு சூழல்களிலும நட்சத்திர நாள், தைப்பூசம் ஆகியவற்றின்போது காவடி ஆட்டத்திற்குத் துணை ஆட்டமாகவும், வாழ்க்கை வட்டச் சடங்குகளில் ஒன்றான காதணி விழாவின்போதும், திருமண மாப்பிள்ளைக்கு நேர்ச்சைக்காகக் கரகம் எடுத்து ஊர்வலம் வரும்போதும், இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

கலை விழாக்களிலும், பொது மேடைகளிலும் இக்கலையை நிகழ்த்துகின்றனர். கைச்சிலம்பம் மற்றும் பம்பையும் இக்கலைக்குரிய இசைக்கருவிகள். இந்த இசைக்கருவிகளின் பெயரால் இது வழங்கப்படுவது இவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டும். இவ்விரு இசைக்கருவிகளில் கைச்சிலம்பை இக்கலையின் ஆதாரக் கருவியாகக் கொள்கின்றனர். பம்பையைப் பொதுவான கருவியாகக் கருதுகின்றனர். இக்கலையை நிகழ்த்துபவர்களின் எண்ணிக்கை, வரையறைக்கு உட்பட்டதல்ல. பொதுவாக இருவரோ, நால்வரோ, அறுவரோ, எண்மரோ ஆடுகின்றனர். இக்கலையை நிகழ்த்துவதற்கு என்று வயது வரம்பு இல்லை. ஆடுவதற்கு வலிமையுடையவர் யாராக இருப்பினும் ஆடலாம். இக்கலையை முதிய கலைஞர்களிடமிருந்து முறையாகப் பயில்கின்றனர். பயில்வதற்கும் கலை வரையறை இல்லை. கைச்சிலம்புக் கலைஞர்களுக்கு என்று தனியான ஒப்பனை ஏதும் இல்லை. ஆட்டக்காரர்கள் காலில் சலங்கைகளைக் கட்டியிருப்பர்.

கொக்கலிக்கட்டை ஆட்டம்

மரத்தாலான நீண்ட கட்டைகளைக் காலில் கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம் கொக்கலிக்கட்டை ஆட்டம் ஆகும். காலில் கட்டும் கட்டை, கொக்கு என்ற பறவையின் நீண்ட கால்களைப் போல் இருப்பதாலும், இந்தக் கால்கள் மரக்கட்டையால் ஆனதாலும் இது கொக்குக் கால் கட்டை ஆட்டம் என வழஙகப்படுகிறது. பேச்சுவழக்கில் கொக்கிலிக்கட்டை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இக்கலை வேலுhர் மாவட்டத்தில் பிரசத்தி பெற்றது. கோவில் கலையான இக்கலை பொதுவிழாக்களிலும், சமூக விழாக்களிலும் ஆடப்படும் நிலைக்குப் பரந்துவிட்டது.

இது கங்கையம்மன் கோவில் விழாவுடன் தொடர்புடைய கலை. கங்கையம்மனுக்கு நேர்ந்தவர்களே இந்த ஆட்டத்தை ஆடுகின்றனர். ஆட்டகாரர்கள் விரதம் இருப்பர். இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம். இதற்கு வயது வரம்பு இல்லை. உடல் வலிமையே முக்கியம். ஆடுகிறவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் இரட்டைப் படையில் இருக்கும். இக்கலைக்குரிய இசைக்கருவிகள் தப்பு, சட்டி, டோலக் (டோல்) ஆகியன. ஆட்டக்காரர்கள் எத்தனை பேராயினும் இசைக்கலைஞர்கள் நான்கு பேர்களே இருப்பர்.

கொக்கலிக்கட்டை ஆட்டத்தில் பயன்படுத்தப்படும் கட்டை 60 செ.மீ முதல் 150 செ.மீ உயரமுடையதாக இருக்கும். கொக்கலிக்கட்டை ஆல், கல்யாண முருங்கை, தணக்கு, நுளா, அகத்தி முதலிய மரங்களிலிருந்து செய்யப்படுகிறது. கொக்கலிக்கட்டை நின்று ஆட வலிமையுடையாதுதானா என்பதைப் பரிசோதித்த பின்பே அதைப் பயன்படுததுவர். இந்தக் கட்டையில் வண்ணத்தாள் ஒட்டியோ, சாயம் பூசியோ அழகுபடுத்துகின்றனர். ஆட்டக்காரர்கள் தங்களுடைய கையை நீளமாக நிட்டினால் எவ்வளவு இடம் கிடைக்குமோ அதனையே ஆட்ட இடமாகக் கொள்வர்.

சேர்வையாட்டம்

சேர்வை என்ற இசைக்கருவியை அடித்து ஆடும் ஆட்டம் சேர்வையாட்டம் எனப்படும். குரும்பர்கள் நிகழ்த்தும் இக்கலை குரும்பக் கூத்து, குரும்பராட்டம், சேர்வைக் கூத்து என வேறு பெயர்களிலும் வழங்கப்படுகிறது. மலைவாழ் மக்களில் ஒருவராகக் கருதப்படும் குரும்பர்கள் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய இடங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. குரும்பர்கள் சிவனை வழிபடுபவர்கள். இவர்களின் முக்கிய தெய்வம் வீரபத்திரக் கடவுள். குரும்பர்களின் பூசாரி, அந்த இனத்தைச் சார்ந்த ஒருவரின் தலையில் தேங்காயை அடித்தல் ‘தலைக்காய் உடைத்தல்’ எனப்படும். சேர்வையாட்டத்துக்குரிய முக்கிய இசைக்கருவி சேர்வை. இது மட்டுமின்றி புல்லாங்குழல், ஜால்ரா, கிலுகிலுப்பை ஆகிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. சேர்வையாட்டத்தை ஆண்கள் மட்டுமே ஆடுகின்றனர். ஆடும் கலைஞர்களுக்கு வயது வரம்பு கிடையாது. இக்கலை நிகழ்ச்சியில் 6 முதல் 12 கலைஞர்கள் வரை பங்கு கொள்கின்றனர்.

சேர்வையாட்டத்தின்போது பாடப்படும் பாடல்கள் பெரும்பாலும் விழா நிகழும் கோவில் தொடர்பானதாக இருக்கும். முக்கியமாக வீரபத்திரசாமி பாடல்கள் பாடப்பட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. மேலும் பஞ்ச பாண்டவர் வன வாசம், காமாட்சி அம்மன் விருத்தம், மன்மதன் கதை, நடராசர் பத்து ஆகிய பாடல்களும் தெம்மாங்கு, கும்மிப் பாடல்களும் பாடப்படுகின்றன. இடையிடையே சில நகைச்சுவைப் பாடல்களையும் பாடுகின்றனர்.